தமிழ்நாடு (Tamil Nadu)

இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல தடை- குமரியில் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-10-18 05:08 GMT   |   Update On 2022-10-18 05:08 GMT
  • குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
  • ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளை தோப்பு, மணக்குடி, கோவளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதால் சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களுக்கு இதற்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு மூலமாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வள்ளங்கள் விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்துகொண்டே இருந்தது. வள்ளவிளை சின்னத்துரை நீரோடி இரயுமன்துறை பூத்துறை பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் வள்ளங்கள் கட்டு மரங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடல் சீற்றமாக காணப்பட்டது.

ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளை தோப்பு, மணக்குடி, கோவளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியிலும் ஒரு சில மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். சின்னமுட்டம், குளச்சல் துறைமுகங்களில் அவர்கள் கரை வந்த வண்ணம் உள்ளனர்.

Tags:    

Similar News