சூலூர் அருகே நள்ளிரவில் வீட்டில் தீப்பிடித்து நண்பர்கள் 3 பேர் பலி
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
சூலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குன்று என்ற இடத்தைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 30). இவர் கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் பணிக்கு செல்வதற்கு வசதியாக சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தார். இவருடன் அவரது ஊரைச் சேர்ந்த 4 லாரி டிரைவர்களும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேரும் தங்கியிருந்தனர்.
நேற்று நள்ளிரவில் இவர்கள் தங்கியிருந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த 7 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டு அலறினார்கள்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தீ வீடு முழுவதும் எரிந்ததால் மற்றவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதுபற்றி சூலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அழகர்ராஜா, அவருடன் தங்கியிருந்த டிரைவர் முத்துக்குமார், சின்னக்கருப்பு ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியானார்கள்.
பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகிய 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாண்டீஸ்வரனுக்கு மட்டும் குறைவான காயங்கள் இருந்துள்ளது. அவர் தான் மற்ற 3 பேரையும் மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளார்.
இந்த கோர விபத்து தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் தங்கியிருந்தவர்கள் டிரைவர்கள் என்பதால் லாரியின் தேவைக்காக சுமார் 10 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தார்களாம். அந்த பெட்ரோலை மற்றொரு கேனுக்கு மாற்றியுள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் சமையல் வேலையும் நடந்துள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனாலேயே 3 பேர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உயிர் தப்பிய பாண்டீஸ்வரன் என்பவர் தான் சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு நடந்த விவரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தின் பெயரிலேயே தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. சிலிண்டர் வெடித்து இருந்தால் அந்த வீடு மட்டுமல்லாமல் பக்கத்து வீடுகளும் சேதம் அடைந்து உயிர்ச்சேதம் அதிகரித்து இருக்கும். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் வெடிப்பதற்குள் அதனை குளிர்வித்து வெளியே கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் பலியான அழகர்ராஜா, ராவத்தூர் பிரிவு அருகே நேற்று காலை லாரி ஓட்டிச் சென்றார். அப்போது மொபட்டில் வந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் ஆசிரியை பலியானார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அழகர்ராஜாவை கைது செய்துள்ளனர். இரவில் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பிய நிலையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் நடந்த சாலை விபத்துக்கும், தீ விபத்துக்கும் எதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.