தமிழ்நாடு

தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினரை காணலாம்.

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

Published On 2023-05-26 10:41 GMT   |   Update On 2023-05-26 10:41 GMT
  • பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
  • அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராமேசுவரம்:

இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தார்கள்.பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் அருகே கோதண்டராம கோவில் பகுதியில் 3 அகதிகள் வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் இன்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு இலங்கையை சேர்ந்த 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் இலங்கை யாழ்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்கிற விஜயன் (வயது46), அவரது மனைவி ராஜினி (45), மகள் திபேந்தினி (18) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரித்ததில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து வந்ததாகவும், அங்கிருந்து கள்ளப்படகு மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் படகில் அழைத்து வந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராம கோவில் கடலோர பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை அங்கு அவர்கள் தவித்தப்படி நின்றிருக்கிறார்கள். மீனவர்கள் கொடுத்த தகவலையடுத்து, அவர்கள் 3 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News