தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 3,172 வழக்குகளுக்கு தீர்வு- ரூ.20½ கோடி இழப்பீடு

Published On 2023-09-10 06:43 GMT   |   Update On 2023-09-10 06:43 GMT
  • மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர். திருவொற்றியூர். பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப் பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது.

இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமை யியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேல்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், மோட்டார் வாகன விபத்து சார்பு நீதிபதி இ.எம்.கே. யஸ்வந்த்ராவ் இங்கர்சால், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் ஸ்டான்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர்கள் முகாம்பிகை, செல்வஅரசி மற்றும் பவித்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், டேனியல் அரிதாஸ் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது. ரூ.19 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரத்து 829 தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 102 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 102 வழக்குகளும் முடிக்கப்பட்டு ரூ.75 லட்சத்து 45 ஆயிரத்து 431 தீர்வு காணப்பட்டது. 6453 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3172 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.20 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 260 இழப்பீடு தீர்வு காணப்பட்டது.

பொன்னேரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி, முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கரன் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் முன்னிலை வகித்தனர். இதில் நிலுவையில் இருந்த 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 1 கோடியே 83 லட்சத்து 21ஆயிரத்து156 இழப்பீடு வழங்கபட்டன. பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News