தமிழ்நாடு

திருப்பத்தூர் அருகே சோகம்: இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Published On 2023-11-11 02:19 GMT   |   Update On 2023-11-11 05:11 GMT
  • திருப்பத்தூர் அருகே இன்று அதிகாலை அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதியது.
  • இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்:

பெங்களூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று இரவு வந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலை தரைப்பாலம் மீது இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.

அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் மீது, அரசு பஸ் அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பஸ்களின் டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பஸ்களில் இருந்த பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 பஸ்களிலும் பயணம் செய்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பட் ஜான் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் மீட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ்களின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய 64 பேரை மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் பலியானார். இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் கடந்து செல்ல வழி இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. விபத்துக்குள்ளான பஸ்களை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இறந்தவர்கள் விவரம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஏழுமலை.

கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்னி பஸ் டிரைவர் நதீம்.

வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் கிளீனர் முகமது பைரோஸ்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த அஜித்.

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா ( 35).

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜி (49) ஆகியோர் பலியாகினர்.

விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிகிச்சை பெற்று வந்த 27 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். லேசான காயமடைந்தவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் பலர் வாணியம்பாடி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாட சென்ற 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News