தமிழ்நாடு

ஏர்வாடியில் அரிய வகை வலம்புரி சங்குகளை பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது

Published On 2023-04-19 04:22 GMT   |   Update On 2023-04-19 04:22 GMT
  • பெரிய தொழில் அதிபர்கள், வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த சங்குகளை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது.
  • கைதானவர்களை, வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63).

இவரது வீட்டில் அரிய வகை வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மதுரையில் உள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாட்டு பிரிவு உதவி வன பாதுகாவலர் மனாசிர் ஹலிமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அரிய வகை பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் இவை இருப்பதால் இவற்றை பதுக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

இதையடுத்து உதவி வன பாதுகாவலர் உத்தரவின்படி வனசரக அலுவலர்கள் சசிகுமார், நவீன்குமார், யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி) மற்றும் வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சண்முகம் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் வீட்டில் 2 வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகம் மற்றும் அவருடன் இருந்த சூரியன் (75), தென்காசியை சேர்ந்த பிரவின் (38), ராஜன் (44), சரவணன் (38), நெல்லையை சேர்ந்த வீரபெருமாள் (47), ஏர்வாடியை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

பெரிய தொழில் அதிபர்கள், வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த சங்குகளை வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்து இந்த கும்பல் வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக சிலரிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசி விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கைதானவர்களை, வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News