போலீசாரை 80 பேர் கும்பல் தாக்கி ரூ.1 கோடி கடல் அட்டைகள் பறிப்பு- பரபரப்பு தகவல்கள்
- கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் போலீசார் மண்டபம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கடல் அட்டை மூட்டைகளுடன் நின்றிருந்த சரக்கு வாகனத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உதவியுடன் டிரைவர் ஓட்டி சென்றுவிட்டார்.
பனைக்குளம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில், அரிய கடல் உயிரினமான கடல் அட்டைகள் கடத்தி வரப்படுவதாக நேற்று அதிகாலையில் கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
உடனே கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் போலீசார் மண்டபம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் மற்றொரு வாகனம் மூலம் அந்த வாகனத்தை விரட்டி சென்றனர். போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்ற காட்சி சினிமாவில் வருவது போல் இருந்தது. வேதாளை பகுதியில் அந்த வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அதனை சோதனையிட்டபோது, சுமார் 40 மூட்டைகளில் 2 டன்னுக்கு மேல் ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் சற்று நேரத்தில், 80-க்கும் மேற்பட்டோர் அங்கு கும்பலாக வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து, கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அதை கேட்க மறுத்து கடலோர போலீசாரை முற்றுகையிட்டு தாக்கினர். மேலும் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது, கடல் அட்டை மூட்டைகளுடன் நின்றிருந்த சரக்கு வாகனத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உதவியுடன் டிரைவர் ஓட்டி சென்றுவிட்டார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே போலீசார் மீது கும்பல் தாக்கியது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்த போலீசாரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
போலீசாரை 80-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதுடன், கடல் அட்டைகளுடன் பறிமுதல் செய்த வாகனத்தை போலீசாரிடம் இருந்து அந்த கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசார் மண்டபம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வேதாளையை சேர்ந்த செய்யது காசிம் மரைக்காயர், ரியாஸ் அகமது, ஹமீது ராஜா உள்பட 80 பேர் கொண்ட தாக்குதல் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கும்பலையும், கடல் அட்டைகளுடன் ஓட்டிச்செல்லப்பட்ட வாகனத்தையும், அதன் டிரைவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.