தமிழ்நாடு (Tamil Nadu)

காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி பலி

Published On 2023-11-25 05:25 GMT   |   Update On 2023-11-25 05:25 GMT
  • படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த பிரான்சிசை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
  • யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி:

கூடலூர் மரப்பாலம் அடுத்த பால்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் அங்குள்ள அரசு தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதி முழுவதும் புதர்கள் மண்டி காணப்பட்டது.

அப்போது அங்கு புதர் மறைவில் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது. புதராக இருந்ததால் பிரான்சிசுக்கு தெரியவில்லை. அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

திடீரென புதர்மறைவில் இருந்து யானை வெளியே வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் தப்பியோட முயன்றார். ஆனால் யானை அவரை துரத்தி சென்று, தூக்கி வீசி காலில் போட்டு மிதித்தது.

இதில் படுகாயம் அடைந்த பிரான்சிஸ், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுப்பினார். அவரது அலறல் சத்தம்கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

அப்போது அங்கு காட்டு யானை ஆக்ரோஷத்துடன் நிற்பதும், பிரான்சிஸ் படுகாயங்களுடன் கிடப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் கூக்குரல் எழுப்பி காட்டு யானையை விரட்டி அடித்தனர்.

பின்னர் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த பிரான்சிசை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரான்சிஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறும்போது, பாலமேடு பகுதியில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவரும் காட்டு விலங்குகளை உடனடியாக அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே கூலித்தொழிலாளி பிரான்சிஸை மிதித்து கொன்ற காட்டு யானையை கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News