திருவண்ணாமலையில் பாரம்பரிய குதிரை சந்தை தொடங்கியது
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திரு விழாவின் முக்கிய அம்சமாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந் நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் குதிரை சந்தை தொடங்கியது.
அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி சந்தைத் திடலில், குதிரை சந்தை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை சந்தைக்கு பல்வேறு வகையான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேபோல், குதிரை சந்தை அமைந்துள்ள பகுதிகளில் விதவிதமான ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த குதிரை வண்டிகளின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்துவிட்டது. ஆனாலும், திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.