'ஆருத்ரா' மோசடி வழக்கில் சிறை சென்று வந்தவர் கடத்தல்- முதலீடு செய்து ஏமாந்தவர்கள் ஆத்திரம்
- முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட சரண்யா கடத்தல் கும்பல் கூறியபடி காஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று காத்திருந்தார்.
- அதிர்ச்சி அடைந்த சரண்யா, கணவர் கடத்தப்பட்டது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்.
போரூர்:
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் அரியலூர், மாவட்டம் இரவான்குடியை சேர்ந்த செந்தில்குமார் (வயது37) என்பவரும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் கடந்த 2 மாதமாக கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சென்னை ஐகோர்ட்டில் தினசரி கையெழுத்திட்டு வருகிறார்.
கடந்த 28-ந் தேதி வழக்கம்போல் ஐகோர்ட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு செந்தில்குமார் சேமாத்தம்மன் நகரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம கும்பல் செந்தில்குமாரை கடத்தி சென்றனர். மேலும் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கடத்தல் கும்பல் "செந்தில்குமார் மூலம் ஆருத்ரா நிறுவனத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளோம், இதனால் செந்தில்குமாரை கடத்தி வைத்து உள்ளோம். உடனடியாக எங்களுக்கு இழப்பீடு தொகை வேண்டும்" என்று கூறி மிரட்டினர்.
இதையடுத்து முதல் கட்டமாக ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட சரண்யா கடத்தல் கும்பல் கூறியபடி காஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்று காத்திருந்தார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கடத்தல் கும்பல் அங்கு வரவில்லை என்று தெரிகிறது. கணவர் செந்தில்குமாரின் செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, கணவர் கடத்தப்பட்டது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்.
உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை செந்தில் குமார் பற்றி எந்த தகவலும் போலீசாருக்கு தெரியவில்லை. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து அவரை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆருத்ரா கோல்டில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.