திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்
- ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
- ஆழித்தேரோட்ட விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று 21-ந்தேதி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.
இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா! தியாகேசா!! என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கும் இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து இன்று மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேரும். பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.
ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தின்போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 500 முட்டுக்கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்ச க்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்துள்ளனர். மக்கள் அதிகம் கூடுவதால் அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்தல், அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.