பிளஸ்-1 தேர்வு: மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத சொன்ன அதிகாரி மீது நடவடிக்கை?
- கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
- விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.
அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.
இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.