தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு 30 அல்லது 31-ந்தேதி கூடுகிறது: முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்க திட்டம்

Published On 2023-01-28 09:56 GMT   |   Update On 2023-01-28 09:56 GMT
  • அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • 31-ந்தேதி பாரதிய ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாரதிய ஜனதாவின் இழுபறி மற்றும் இரட்டை இலை சின்னம் காரணமாக வேட்பாளர் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்தார்.

பொதுவாக அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பது ஆட்சி மன்ற குழுதான். திருத்தப்பட்ட அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் 8 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர் ஒருவரும் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.பி. வேணு கோபால், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகிய 6 பேர்தான் தற்போது ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக நீடிக்கிறார்கள். வேட்பாளர் தேர்வு குறித்து இந்த குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

இன்றும், நாளையும் பஞ்சாங்கத்தின்படி சரி இல்லாததாக கருதியதால் அ.தி.மு.க. வேட்பாளர் தொடர்பாக எந்த ஆய்வும் நடக்கவில்லை. திங்கட்கிழமை (30-ந்தேதி) அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு கூட்டத்தை கூட்டுவதற்கு மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அன்று ஆட்சி மன்ற குழுவை கூட்ட முடியாவிட்டால் 31-ந்தேதி உறுதியாக அந்த கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

அதில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு பற்றி திட்டவட்டமாக முடிவுகள் எடுக்கப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் வேட்பாளர் பற்றி எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

31-ந்தேதி பாரதிய ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா என்ன முடிவு எடுத்தாலும் கண்டு கொள்ள வேண்டாம் என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக உள்ளனர். எனவே 30 அல்லது 31-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பற்றிய உறுதியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News