தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Published On 2024-09-22 02:47 GMT   |   Update On 2024-09-22 02:47 GMT
  • அண்மையில் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியிருக்கிறார்.
  • 2026-ல் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும்.

சென்னை:

அண்ணாவின் 116-வது பிறந்த நாளையொட்டி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

முன்னதாக, கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர், மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எடப்பாடி பழனிசாமி, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

அ.தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்கள் ஆட்சியில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தி.மு.க., இன்றைக்கு குடும்பத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த திராவிட மாடல் ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 68 பேர் இறந்து போனார்கள். நகரம் முதல் கிராமம் வரை கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது. ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதை விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதையினால் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. கடந்த 20 நாட்களில் 6 பாலியல் கொடுமை நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதற்கு இதுவே சான்று. தினமும் படுகொலை நடக்கிறது. கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

காவல் துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. காவலரை பார்த்து குற்றவாளிகள் பயப்படுவதில்லை. கஞ்சா போதையில் தாக்குகிறார்கள். அண்மையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடந்தினார்கள். நாணயம் வெளியிட்டனர். அதை வெளியிட மத்திய மந்திரியை அழைத்தனர். அவர்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை அழைக்கவில்லை. பாரதிய ஜனதா தலைவர்களை அழைத்து வெளியிட்டனர். இதில் இருந்து, தி.மு.க.வின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

தாங்கள் செய்த ஊழலை மறைக்க மத்திய அரசை அழைத்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்தி இருக்கிறார்கள். சுயநலத்தின் மொத்த உருவம் தி.மு.க.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் சென்றார். அப்போது, தமிழகத்திற்கு எவ்வளவு தொழில் முதலீடு வந்தது?, எவ்வளவு ஒப்பந்தம் போடப்பட்டது?, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?. அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். உண்மை வெளிவந்துவிடும் என்பதால், வெளியிட மறுத்துவிட்டனர்.

அண்மையில் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியிருக்கிறார். அங்குபோய், சைக்கிள் ஓட்டினார். மக்கள் வரி பணம் ஊதாரித்தனமாக செலவு செய்யப்பட்டது. அவரது மகன் உதயநிதி இங்கே கார் பந்தயம் நடத்துகிறார். இது மக்களுக்கு தேவையா?. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களின் சாதனை இதுதான்.

அ.தி.மு.க. இணையப்போவதாக கூறப்படுகிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சியில் இருந்து 4 பேர் நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள். அ.தி.மு.க., பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது.

2026-ல் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தி.மு.க. கூட்டணியில் இப்போது புகைய ஆரம்பித்து இருக்கிறது. அடுத்து நெருப்பு பற்றும். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும். அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் எஸ்.அப்துல்ரஹீம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், இலக்கிய அணியின் மாநில துணை செயலாளர் இ.சி.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News