தமிழ்நாடு (Tamil Nadu)

போராட்டம்

கரூரில் பரபரப்பு - அ.தி.மு.க. நிர்வாகியை காரில் கடத்தி தாக்குதல்

Published On 2022-12-21 00:09 GMT   |   Update On 2022-12-21 00:09 GMT
  • கரூரில் அ.தி.மு.க. நிர்வாகியை காரில் கடத்தி தாக்குதல் நடத்தினர்.
  • இதைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்:

கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு உட்பட்ட கோதூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் கோதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே சிவராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சிலர் சிவராஜை கடத்திச் சென்றுள்ளனர். சுக்காலியூர் அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த சிவராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இத்தகவல் அ.தி.மு.க.வினரிடையே காட்டுத்தீபோல் பரவியது.

இதையடுத்து, அ.தி.மு.க.வினர் கரூர் கோவை-ஈரோடு சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் சிவராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News