7 நாட்களுக்கு பின்னர் ஏரல் தரைமட்டப்பாலம் வழியாக போக்குவரத்து தொடக்கம்
- வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
- 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
கனமழையால் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் ஏரல் பஜார் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் படிப்படியாக வடிந்ததையொட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்தை தொடங்குவதற்காக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே இருந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
இதற்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்காலி கமாக அந்த தரைமட்ட பாலம் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 7 நாட்களுக்கு பின்னர் ஏரல் தரைமட்ட பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.