அகில இந்திய அளவில் தி.மு.க. கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே என் நோக்கம்- திருமாவளவன் பேட்டி
- அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம்.
- ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு, கண்காட்சி புத்தகத்தில் பாராட்டி எழுதினார்.
பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
முதல்வரின் அயராத உழைப்பால் முன்னேறி இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சி அமைந்து இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என பேசி இருக்கிறார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி.
ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் சட்டத்தின் காரணத்தை கூறும் கவர்னர் மனிதாபிமான அடிப்படையில் கூட முடிவு எடுப்பதற்கு ஏன் யோசிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.