30 மாதங்களில் ஊழலை சாதனையாக செய்தது தி.மு.க. அரசு: அண்ணாமலை ஆவேசம்
- தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர்.
- தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை.
பெரம்பலூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் யாத்திரையில் பங்கேற்றார்.
பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய நடைபயணம் ரோவர் ஆர்ச், சங்குபேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்பக்குளம் கனரா வங்கி, பழைய பஸ்ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக வந்து ஆத்தூர் சாலை காமராஜர் வளைவு பகுதியில் முடிவடைந்தது.
என் மண் என் மக்கள் யாத்திரையை ஜூலை 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி தென் தமிழகம், கொங்கு மண்டலம் பூர்த்தி செய்து 107-வது சட்டசபை தொகுதியாக பெரம்பலூருக்கு யாத்திரை வந்துள்ளேன். எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளேன்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர். ஏழை மக்களை பரம ஏழையாக மாற்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே 32 சதவீதம் உற்பத்தி திறனில் வளர்ச்சியில் உள்ளது. பெரம்பலூரின் உற்பத்தி திறன் வெறும் புள்ளி 6 சதவீதம் கூட கிடையாது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் ஒரு சதவீதம் கூட உற்பத்தி திறனை அடையவில்லை. 70 ஆண்டுகளாக 6 முறை தி.மு.க. ஆட்சி புரிந்தும் உற்பத்தி திறன் பெறவில்லை.
தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. தொழிற்சாலை கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.
பாசன வசதியை மேம்படுத்தவில்லை, விவசாயத்தை செழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தமிழகத்திற்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது. நம்மை ஒதுக்கிய அரசியல்வாதிகளை நாம் ஒதுக்கிவைக்கவேண்டும்.
ஊழல் பட்டியல் வெளியிட்டு வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அமைச்சரவையில் உள்ள 35 பேரில் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு உள்ளது.
5 பேர் மீது தற்போது ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இந்த அளவிற்கு ஊழல் செய்த அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர். 30 மாதங்களில் ஊழலை சாதனையாக செய்துள்ளது தி.மு.க. அரசு.
திருவண்ணாமலையில் சிப்காட்டிற்காக அரசு 3 ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக அவர்களது விவசாய நிலத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு தி.மு.க. அரசு தான்.
அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்த பட்டியலில் உலக அளவில் முன்னாள் மந்திரி ராசா பெயர் 2-வது இடத்தில் உள்ளது. கோவையில் அவருக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
9 ஆண்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறது.
தமிழகத்தில் தேர்தலில் அளித்த 511 தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என தி.மு.க. கூறுகிறது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
2014-ம் ஆண்டில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 11-வது பெரிய நாடாக இருந்தது. தற்போது உட்கட்டமைப்பு, சாலை மேம்பாடு என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து உலக அளவில் பொருளதாரத்தில் 5 இடத்திற்கு உயர்ந்துள்ளது. நாகரிகமான அரசியல் தமிழக மண்ணிற்கு வரவேண்டும், வளர்ச்சி சார்ந்த அரசியல் வரவேண்டும், ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கான அரசியல் வரவேண்டும். அப்படிபட்ட ஆட்சி வரவேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். அதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
யாத்திரையில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம், மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் நகர தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.