பக்குவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்- வேலுமணி ஆவேசம்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்.
- யார் கூட்டணியில் இருந்தாலும் எப்போதும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
கோவை:
கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர். அவர் என்ன சொல்கிறாரோ அதனை தான் நாங்கள் செய்வோம்.
யார் கூட்டணியில் இருந்தாலும் எப்போதும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேசினார். தற்போது அண்ணா பற்றி பேசி உள்ளார். அவர்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது. அண்ணாமலை பக்குவமில்லாமல் பேசி வருகிறார். அண்ணாமலை கூறியது போல் அண்ணா யாரிடமும் சென்று மன்னிப்பு கேட்கவில்லை. அவர் அண்ணா பற்றி பேசியது ஏற்புடையதல்ல. வரலாற்றை மறைத்து உண்மைக்கு புறம்பாக பேசி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.