புதுமைப்பெண் திட்டம்: பெண்கள் உயர்கல்வி பயில வழிவகுக்கும்- அரவிந்த் கெஜ்ரிவால்
- புதுமைப் பெண் திட்டம் பெண் கல்விக்கான புரட்சிக்கரமான திட்டம்.
- இந்தியா முழுவதும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற "புதுமைப் பெண்" திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும், அதை கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சமுதாயத்தின் அடிப்படை ஆசிரியர்கள்தான்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தபோது டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, "தமிழ்நாட்டில் இதே போன்று கட்டமைப்புடன் பள்ளிகள் உருவாக்கப்படும்" என்று கூறினார்.
ஆனால் 6 மாதத்துக்குள் இதை இங்கு கொண்டு வந்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். டெல்லியை போல் தகைசால் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டு உள்ளன.
புதுமைப் பெண் திட்டம் பெண் கல்விக்கான புரட்சிக்கரமான திட்டம். இந்த திட்டம் மூலம் ஏராளமான மாணவிகள் உயர்கல்வி பயில வழி வகுக்கும்.
தமிழ்நாடு, டெல்லியை போன்று அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து நல்ல விசயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர் திறமை இருந்தும் வறுமை காரணமாக தங்கள் படிப்பை கைவிடும் சூழல் உள்ளது.
ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறிதான். எனவே நல்ல, தரமான இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளை மூடினால் ஏழை-எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வார்கள்? அப்படி இருந்தால் நாடு வளராது.
இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை தொடங்கும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன். நானும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லிக்கு வருமாறு மு.க.ஸ்டாலினை அழைப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்த தகைசால் பள்ளிகள் விவரம் வருமாறு:-
முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காமராஜ் நகர், சென்னை மாவட்டம் தி.நகர், அசோக் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர், நந்திவரம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி, வாணியம்பாடி, தருமபுரி மாவட்டம் தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், சேலம் மாவட்டம் சேலம் நகரம், குகை, ஈரோடு மாவட்டம் ஈரோடு, நீலகிரி மாவட்டம் கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி, கரூர் மாவட்டம் குளித்தலை, திருச்சி மாவட்டம் திருச்சிராப்பள்ளி, கடலூர் மாவட்டம் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் மதுரை தெற்கு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், கிருஷ்ணகிரி மாவட்டம்- கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப்படுகிறது.
மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை அதிகரிக்கவும், வகுப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்தவும் இந்தப் பள்ளிகள் தளமாக விளங்கும்.
இதே போல் இந்த கல்வியாண்டிற்கு சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோவை, திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தொடங்கப்படுகிறது.