மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம்
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- விக்னேஷ் மீத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.