படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைப்பது அவசியம்
- கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
- பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.
மதுரை:
தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட்டு பிறப்பித்தது.
கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. அவர்களை பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.
எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பஸ்களிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.
பின்னர், தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.