தமிழ்நாடு

ஒரு வயது பெண் குழந்தையின் இதயம் சென்னை குழந்தைக்கு பொருத்தப்பட்டது

Published On 2024-05-31 08:06 GMT   |   Update On 2024-05-31 08:06 GMT
  • காயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
  • குழந்தை மூளைச்சாவு அடைந்த தகவலை கேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர்.

கோவை:

கோவையை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார்.

இவர்களுக்கு பிறந்து 11 மாதம் ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த குழந்தை கீழே விழுந்தது. இதில் காயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஆதிரா நேற்று மூளைச்சாவு அடைந்தாள்.

குழந்தை மூளைச்சாவு அடைந்த தகவலை கேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களை நண்பர்கள் மற்றும் டாக்டர்கள் சமாதானப்படுத்தினர்.

மேலும் அவர்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்வதனால் ஏற்படும் நன்மை குறித்து விரிவாக விளக்கினர். இதனை ஏற்று, குழந்தையின் பெற்றோரும், குழந்தையின் உடல் உறுப்புகளை செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழந்தையின் உடலில் இருந்து இதயம், கிட்னி ஆகியவற்றை எடுத்தனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும், 1 வயது பெண் குழந்தைக்கு இதயம் தேவைப்படுவது தெரியவந்தது. இதையடுத்து இங்குள்ள டாக்டர்கள், அங்குள்ள டாக்டர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து இதயத்தை கோவையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் தொடங்கினர். அதன்படி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையின் இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டு செல்லப்பட்டு, அங்கு இருந்து ஆம்புலன்சில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து டாக்டர்கள் இதயத்தை அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது குழந்தைக்கு பொருத்தினர்.

Tags:    

Similar News