தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. அணி வெற்றி வாகை சூடும்- ஜி.கே.வாசன்

Published On 2023-06-08 04:35 GMT   |   Update On 2023-06-08 04:35 GMT
  • ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள்.
  • தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

கோவை:

கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காத்து இருக்காமல் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். கொங்கு மண்டல பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

மேலும் தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள், வைத்தியலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என்றார்.

Tags:    

Similar News