தமிழ்நாடு
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து
- கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
- விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு இன்று காலை சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர்.
அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6 மணிக்கே வரிசையில் நின்றனர்.
ஆனால் கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. ராட்சத அலைகள் சுமார் 15 அடி உயரம் வரை எழுந்தது.
இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
எனவே விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.