தமிழ்நாடு (Tamil Nadu)

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி - மோப்பநாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தியபோது எடுத்தபடம்.

மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் அதிரடி சோதனை

Published On 2024-09-30 06:50 GMT   |   Update On 2024-09-30 06:50 GMT
  • யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
  • மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை:

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ஒருவருக்கு செல்போன் வாயிலாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதேபோல் பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி காம்பஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் வேலம்மாள் பள்ளி அருகிலேயே மருத்துவக்கல்லூரியும் அமைந்துள்ளது.

அடுத்தடுத்து வந்த தொடர் மிரட்டலையடுத்து மூன்று பள்ளிகளுக்கும் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 6 தனியார் பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்பேரில் மேற்கண்ட அந்த பள்ளிகளுக்கும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாநகரில் அதிகாலையில் செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் 9 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வரை மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தொடர்பான எந்தவொரு பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த பள்ளிகளுக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் சென்றிருந்தனர். தகவல் கிடைத்ததும் பள்ளிகளுக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News