நீட் பயிலும் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்- பயிற்சி மையம் மீது வழக்குப்பதிவு
- மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
- சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்காக அங்கேயே தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதால் அவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட பிரம்பால் அடித்து சித்ரவதை செய்தது அப் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் என தெரியவந்துள்ளது.
காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அகமத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 323, 355, 75 JJ act பிரிவுகளில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலப்பாளையம் உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்துகிறார்.
சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.