தமிழ்நாடு

திருநங்கைகள் வளர்க்கும் காளைகளும் ஜல்லிக்கட்டில் இடம்பெற செய்ய வேண்டும்- கலெக்டரிடம் மனு

Published On 2023-01-11 10:25 GMT   |   Update On 2023-01-11 10:25 GMT
  • நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம்.
  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இதையொட்டி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம். கடந்த முறை எங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் எங்களது காளைகள் போட்டியில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வலைதளம் மூலமாக நாங்கள் பதிவு செய்தோம். அதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.

அந்த குளறுபடிகளை நீக்கி உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகளும் பங்கு பெறுவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகள் பங்கு பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் திருநங்கைகள் தாங்கள் வளர்த்து வரும் காளைகளும் போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மேலூர் ஒன்றிய செயலாளர் கருப்பணன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தில் மேலூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறேன்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நான் முதலிடம் பெற்றேன். ஆனால் அரசு விதிமுறைகளை மீறி ஆள் மாறாட்டம் செய்த வேறு ஒரு நபருக்கு முதலாவது பரிசு அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த நீதிபதி, அலங்காநல்லூர் விழாக்குழு முடிவு எடுத்து எனக்கு பரிசை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளார். ஆனால் இதுவரை பரிசை வழங்கவில்லை.

எனவே மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு சேரவேண்டிய முதல் பரிசை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News