10 ஆண்டுகளில் நாட்டை பாதாளத்தில் தள்ளியுள்ளது பா.ஜ.க- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார்.
- இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா?
மக்களவை தேர்தல் முன்னிட்டு போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் உள்ள சிந்தலக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி திமுக. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மறக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட டிவியை பார்த்துக்தான் தெரிந்து கொண்டேன். அந்த சம்பவத்தை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணிகள் வழங்கப்பட்டது. ஈபிஎஸ் மக்கள் விரோத ஆட்சியை நடத்தினார். மக்களை ஏமாற்ற மீண்டும் பிரசாரம் செய்து வருகிறார். பாஜக பற்றி ஈபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?
தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, உதயநிதி குறித்து ஈபிஎஸ் விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
10 ஆண்டுகளில் நாட்டை பாஜக பாதாளத்தில் தள்ளியுள்ளது. தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் தமிழகம் பக்கம் வருவார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட திமுக, காங்கி தான் காரணம் என பிரதமர் பேசுகிறார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்க பிரதமர் தயங்குவது ஏன்?
இலங்கையை கண்டிக்க முடியாத நீங்கள், விஸ்வகுருவா? மௌன குருவா? தமிழக மீனவர்களை காப்பாற்ற தவறிய மோடி, திசை திருப்ப தங்களை விமர்சிக்கிறார். கருப்பு பணத்தை மீட்டு தருவதாக கூறினார் பிரதமர் தந்தாரா ?
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை நிலவுகிறது. தமிழகத்திற்கு தந்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை.
தமிழகத்திறகாக பிரதமர் என்ன சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தார்?
இவ்வாறு அவர் கூறினார்.