வேதாரண்யம் அருகே சீன படகு கரை ஒதுங்கியது- உளவாளிகள் ஊடுருவலா?
- கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கிய கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி.கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்(நாகை), சுரேஷ்குமார்(திருவாரூர்), வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த ரப்பர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகு 13 மீட்டர் நீளத்திலும், 3 அடி அகலத்திலும் இருந்தது. படகு துடுப்பை பயன்படுத்தி செலுத்த கூடியதுபடகில் இலங்கையில் பயன்படுத்தபடும் 1½ லிட்டர் அளவு கொண்ட 16 தண்ணீர் பாட்டில்களும், 4 பாதுகாப்பு உடைகளும், நீந்துவதற்கு பயன்படுத்தும் ஒரு ஜோடி காலணி மற்றும் கண்ணாடி, கருப்பு நிற பை உள்ளிட்டவைகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது. அது படகு கரை ஒதுங்கி கிடந்த இடத்தில் இருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் காட்டுப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து யாராவது இந்த படகில் வந்தார்களா? அல்லது சீனாவை சேர்ந்த உளவாளிகள் வந்தார்களா? என பல்வேறு கோணங்கணில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும், இலங்கையில் இருந்து தங்கம் கடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது வேதாரண்யம் அருகே கோடியக்காடு மூணாங்காட்டில் முதல் முறையாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 5 சீன உளவாளிகள் கடல்வழியாக ஊடுருவலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வேதாரண்யம் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி இருப்பது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.