தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பா?

Published On 2022-10-28 10:07 GMT   |   Update On 2022-10-28 10:07 GMT
  • இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
  • முபினின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் காவலில் எடுத்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.

கோவை:

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் சர்வதேச அளவிலான வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பது ஏற்கனவே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்துக்காகவே கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் உள்ளான்.

முபினும் அவனது கூட்டாளிகளும் இந்த அசாருதீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட தகவல்கள் தற்போது உறுதியாகி உள்ளன.

போலீஸ் காவலின்போது முபினின் கூட்டாளிகளில் ஒருவனான பெரோஸ் இது தொடர்பாக திடுக்கிட வைக்கும் வகையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனால் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விசாரணை மாநிலங்களை தாண்டி விரிவடையும் என்பதாலேயே என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமோ? என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கேரள சிறையில் உள்ள 6 பேரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே முபினின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் காவலில் எடுத்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். இன்று அவர்களின் 3 நாள் காவல் முடிவடைகிறது.

இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ள 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் தனியாக மனுதாக்கலும் செய்ய உள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தும் இந்த விசாரணையின் முடிவில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சர்வதேச பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருந்தால் அதுவும் அம்பலமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News