கொடநாடு குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தொடர் போராட்டம்- தேனியில் ஓ.பி.எஸ். பேச்சு
- 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது.
- வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம்.
தேனி:
தேனி பங்களாமேட்டில் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,
தான் முதல்-அமைச்சர் ஆனவுடன் 3 மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர்.
எனவே இந்த வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை உணர்த்தும் வகையில் தான் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இனியும் காலம் தாழ்த்தினால் அ.ம.மு.க. தொண்டர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.
எப்போதுமே மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் செயல்படும் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது மட்டுமின்றி, சிலமணிநேரம் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பதவி ஆசை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் அக்கறைகாட்டாமல் தனது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவது தெரிந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எங்களை கேலி செய்கின்றனர்.
இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கண்டன கோஷங்களை ஓ.பி.எஸ், தினகரன் எழுப்ப, அதனை தொண்டர்கள் மீண்டும் கூறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.