ஒரே அறையில் 2 கோப்பைகள்... சர்ச்சையை ஏற்படுத்திய டாய்லெட்: மாநகராட்சி சொன்ன விளக்கம்
- மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
- ஆண்களுக்கான கழிப்பறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை:
கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறை குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சி 66வது வார்டில் இந்த கழிப்பிடம் அமைந்துள்ளது. 1995ஆம் பொதுமக்களுக்காக இந்த கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த கழிப்பிடம் செயல்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், அதில் உள்ள கழிவறையில் இரண்டு பேர் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் இரண்டு கோப்பைகள் பதிக்கப்பட்டிருந்த புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கழிவறையில் கதவுகள் இல்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதாகவும், அதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் சிலர் கருத்து பதிவிட்டனர். சிலர் கிண்டலான கருத்துக்களையும் பகிர்ந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
1995ல் கழிப்பிடம் கட்டப்பட்டபோது குழந்தைகளுக்காக கட்டப்பட்டது. கதவுகள் இருந்தால் தாழ்ப்பாள் போட்டு வெளிவர முடியாத நிலையில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும் என்பதால், பெற்றோரின் கண்காணிப்பில் குழந்தைகள் அந்த கழிவறையை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அது நீண்டகாலம் செயல்பாட்டில் இல்லாததால் தற்போது ஆண்களுக்கான கழிப்பறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் பயன்பாட்டிற்காக கதவின்றி கழிப்பிடம் அமைக்கப்பட்டதை தவறான வகையில் சித்தரித்து புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். விரைவில் ஆண்களுக்கான கழிப்பிடமாக மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.