தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

Published On 2024-05-08 11:21 GMT   |   Update On 2024-05-08 12:02 GMT
  • சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
  • கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் தனியாக வழக்கு போட்டிருந்தனர். 2-வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் கோவை மற்றும் தேனியில் போடப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார். மற்ற 4 வழக்குகளிலும் அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு வலது கையில் கட்டு போட்டபடி சவுக்கு சங்கர் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நீதிமன்ற வளாகம் முன்பு காத்திருந்த பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News