தமிழ்நாடு

பத்மநாபன்

கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

Published On 2024-07-28 09:33 GMT   |   Update On 2024-07-28 09:33 GMT
  • தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க தனது நண்பர் ரங்காவுடன் பத்மநாபன் சென்றார்.
  • பாட்டு கச்சேரி நடந்தபோது பத்மநாபன் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பாகூர்:

கடலூர் திருப்பாதிரி புலியூர் நவனீதம் நகரை சேர்ந்தவர் பக்தா என்ற பத்மநாபன் (வயது 45) பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் அப்பகுதி 25-வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவரது தந்தை தெருக்கூத்து கலைஞர் என்பதால் பத்மநாபனுக்கு தெருக்கூத்து மீது ஆர்வம் இருந்து வந்தது. அப்பகுதியில் எங்கு தெரு கூத்து நிகழ்ச்சி நடந்தாலும் பத்மநாபன் அங்கு சென்று நிகழ்ச்சியை பார்ப்பது வழக்கம்.

நேற்று இரவு புதுவை மாநிலம் பாகூர் அருகே இருளன் சந்தையை அடுத்துள்ள தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க தனது நண்பர் ரங்காவுடன் பத்மநாபன் சென்றார்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் தெருகூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பத்மநாபனும் அவரது நண்பர் ரங்காவும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இருளன் சந்தை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் திடீரென பத்மநாபன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

இதனால் பத்மநாபனும் அவரது நண்பர் ரங்காவும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து ஒரு கும்பல் கத்தியுடன் கீழே இறங்கியது. இதனை பார்த்ததும் பத்மநாபனின் நண்பர் ரங்கா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அந்த கும்பல் பத்மநாபனை சுற்றி வளைத்து வீச்சரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பத்மநாபன் அதே இடத்தில் இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்று விட்டது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. கடந்த ஆண்டு திருப்பாபுலியூரில் பாட்டு கச்சேரி நடந்தபோது பத்மநாபன் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பாஸ்கரன் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பத்மநாபன் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் பத்மநாபன் வந்திருந்தார்.

அடுத்த மாதம் பாஸ்கரனுக்கு நினைவு நாள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் கொலைக்கு பழிக்குபழி வாங்க அவரது கூட்டாளிகள் பத்மநாபனை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News