தமிழ்நாடு

குழந்தையை விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகம்- டெல்லி புரோக்கர் கைது

Published On 2023-01-20 10:03 GMT   |   Update On 2023-01-20 10:03 GMT
  • வக்கீல் அந்த குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார்.
  • குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பக பராமரிப்பில் விடப்படுமா? என்பது தெரியவரும்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 33). திருமணம் ஆகாத நிலையில் தகாத உறவினால் கர்ப்பம் தரித்தார். பின்னர் அந்த கருவை கலைக்க முயற்சி செய்தார். ஆனால் 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கலைப்பது சாத்தியமில்லை என்பதை அறிந்து அமைதியானார்.

அதன் பின்னர் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தையை வளர்க்க மனமின்றி அதனை விற்க முயற்சி செய்துள்ளார். அதன்படி அந்த பகுதியில் வசித்து வரும் வக்கீல் பிரபு என்பவர் மூலம் குழந்தையை விற்பனை செய்தார்.

வக்கீல் அந்த குழந்தையை ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளார். இதனைத் தாமதமாக அறிந்து கொண்ட ஜானகி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வக்கீலை பழி வாங்குவதற்காக குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனு தாக்கல் செய்து ஒரு நாடகம் ஆடினார்.

அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தாயின் ஒப்புதலுடனேயே அந்த குழந்தை விற்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் ஜானகி, வக்கீல் பிரபு, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா உள்ளிட்ட 6 பேரை லால்குடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னர் புரோக்கர் கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த குழந்தை டெல்லியில் உள்ள மற்றொரு புரோக்கர் மூலம் மீண்டும் கை மாறி இருப்பது தெரிய வந்தது. உடனே குழந்தையை மீட்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி விரைந்தனர். அதன் பின்னர் டெல்லியை சேர்ந்த புரோக்கர் கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஜானகியின் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஜன்னம்மா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பாக்யஸ்ரீ தம்பதிக்கு குழந்தை இல்லாததால் டெல்லியில் சிகிச்சை பெற்றபோது, அவரை அணுகிய புரோக்கர் கோபி ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்து அவரும் கமிஷன் பெற்றுள்ளார்.

இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையுடன் தனிப்படை போலீசார் திருச்சி திரும்பி உள்ளனர். பின்னர் முறைப்படி அந்த குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அதன் பின்னரே அந்த குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பக பராமரிப்பில் விடப்படுமா? என்பது தெரியவரும்.

இதற்கிடையே கைதான டெல்லி புரோக்கரை அங்குள்ள கோர்ட்டு அனுமதியுடனும், ரூ.5 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிய பாக்கியஸ்ரீ என்ற பெண்ணையும் உரிய அனுமதியுடன் திருச்சிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளர்.

Tags:    

Similar News