தமிழ்நாடு

கோவில் கொடை விழாவில் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்ட பரோட்டா

Published On 2024-09-19 05:04 GMT   |   Update On 2024-09-19 05:04 GMT
  • வழக்கமாக இந்த கோவில் கொடை விழாக்களில் பொங்கல், புளியோதரை, மதியம் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும்.
  • கடந்த ஆண்டு இதே கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக சப்பாத்தி வழங்கியது குறிப்பிடத்கத்தது.

ஆலங்குளம்:

நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆடி மாதத்தில் தொடங்கி வரிசையாக அம்மன் கோவில்களில் கொடை விழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். ஆடுகள் பலியிடுதல், சாமக்கொடை, மதிய கொடை என பல்வேறு வகை நிகழ்ச்சிகள் இந்த கொடை விழாக்களில் நடைபெறும்.

இன்றளவும் கிராமப்பகுதிகளில் விமரிசையாக நடந்து வரும் இந்த விழாக்களை காண வெளியூர்களில் இருந்தும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

வழக்கமாக இந்த கோவில் கொடை விழாக்களில் பொங்கல், புளியோதரை, மதியம் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும். இதனை கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு செல்வார்கள். ஆனால் சமீப காலமாக சற்று வித்தியாசமாக அரிசி சாதத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்டவைகளை அன்னதானமாக வழங்குவது நெல்லை, தென்காசி மாவட்ட கோவில்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் நாராயணசுவாமி கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அந்த ஊர் இளைஞர்கள் முழு பங்களிப்புடன் பரோட்டா தயார் செய்து அன்னதானமாக வழங்கினர்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் சமீபத்தில் நடந்து முடிந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களின் பங்களிப்புடன் பக்தர்களுக்கு இரவு அன்னதானமாக சப்பாத்தி, குருமா வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆலங்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலிலும் தற்போது கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. அந்த கோவிலிலும் வித்தியாசமாக அன்னதானம் வழங்கவேண்டும் என்று முடிவு எடுத்த கோவில் நிர்வாகிகள், பரோட்டா வழங்க திட்டமிட்டனர்.

இதையடுத்து கொடை விழா நிறைவு நாளன்று 16 பேர் கொண்ட குழு மாஸ்டர் சுந்தர் என்பவர் தலைமையில் பரோட்டா சுட்டனர். சுமார் 750 கிலோ மாவு பயன்படுத்தி கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 800 பரோட்டாக்கள் போடப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பரோட்டாவையும், அதற்கு வழங்கப்பட்ட சென்னா மசாலாவையும் போட்டி போட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

கடந்த ஆண்டு இதே கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக சப்பாத்தி வழங்கியது குறிப்பிடத்கத்தது.

Tags:    

Similar News