தமிழ்நாடு

பிரதமரின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

Published On 2024-05-29 12:31 GMT   |   Update On 2024-05-29 12:39 GMT
  • மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார்.
  • விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.

பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும் பிரதமரின் இந்நிகழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News