ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து திமுக மாணவரணியினர் நாளை போராட்டம்
- துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் சந்திப்பதற்கு திமுக மாணவரணியினர் கடும் கண்டனம்
- திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.
மேலும், ஆளுநரை கண்டித்து நாளை சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்