வறண்டு வரும் மூல வைகை ஆறு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
- மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
வருசநாடு:
வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும். மூல வைகையாற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கு 5 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.
அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கனஅடியாகும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. 42 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.