பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க மண் கொட்டும் பணி- தடுத்து நிறுத்திய சிலரால் பரபரப்பு
- பணியாளர்களையும், தலைமை ஆசிரியர் காவேரி மற்றும் ஆசிரியர் பெருமக்களை தரக்குறைவாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்.
- கடந்த மாதம் தாசில்தாரின் அறிவுறுத்தலின்படி சர்வேயர் அந்த இடத்தை அளந்து எல்லை கற்களை நட்டார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகங்களில் ரூ 6.77 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் அருகே மழை நீர் குளம் போல் தேங்குவதை தடுக்கும் வகையில் தாழ்வான பகுதியில் மண் கொட்டும் பணி நேற்று நடைபெற்று வந்தது.
அப்போது அங்கு வந்த சிலர் பள்ளி வளாகத்தில் மண் கொட்டி சமன் செய்யும் பணியை தடுக்கும் வகையில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்களையும், தலைமை ஆசிரியர் காவேரி மற்றும் ஆசிரியர் பெருமக்களை தரக்குறைவாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹேமபூசனம்,எஸ்.எம்.சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ராஜேந்திரபாபு,கருணாகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்து மண் கொட்டும் பணியை தடுத்தவர்களிடம் நியாயம் கேட்டனர். மேலும், 1990-ல் ஆரணி பேரூராட்சிமன்ற தீர்மானத்தின்படி இப்பள்ளிக்கு தானம் வழங்கிய இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் தாசில்தாரின் அறிவுறுத்தலின்படி சர்வேயர் அந்த இடத்தை அளந்து எல்லை கற்களை நட்டார். அந்தப் பகுதியில் மண் கொட்டக்கூடாது என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு என்று தானம் வழங்கிய இடத்தை வருவாய்த் துறையினர் குளம் என்று இருப்பதை ஆரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று மாற்றாததே பிரச்சனைக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறினர்.
எனவே, இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்,பொன்னேரி கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.