ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி
- வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
- ஆற்றல் அசோக் குமார் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3 கட்சிகளின் தலைமையில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.
தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது.
இதற்கிடையே வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 39 தொகுதியில் 326 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என தெரிய வந்துள்ளது. வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவர் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை 412 ஆண் வேட்பாளர்கள், 67 பெண் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.