எதிர்பார்த்த ரஜினி அரசியலுக்கு வரவில்லை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பார்ப்போம்- கே.எஸ்.அழகிரி
- மேட்டுப் பாளையம் ஜோசப் பேபி தயாரித்து நடித்துள்ள கக்கனின் திரைப்பட விளம்பர போஸ்டரை வெளியிட்டார்.
- எஸ்.சி.துறை சார்பில் நலிந்த கட்சி தொண்டர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சென்னை:
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பது நேற்று அவர் நடத்திய நிகழ்ச்சி மூலம் வெளியாகி இருக்கிறது. அவர் வந்தால் அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்ட போது, 'இப்படித்தான் நடிகர் ரஜினி இதோ வருகிறார். அதோ வருகிறார் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை.
இப்போது நடிகர் விஜய்யை பற்றி சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்' என்றார்.
முன்னதாக மறைந்த அமைச்சர் கக்கனின் 116-வது பிறந்தநாளை யொட்டி சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மேட்டுப் பாளையம் ஜோசப் பேபி தயாரித்து நடித்துள்ள கக்கனின் திரைப்பட விளம்பர போஸ்டரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., எஸ்.சி., எஸ்.டி. தலைவர் ரஞ்சன்குமார், மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி, கோபண்ணா, சுமதி அன்பரசு, எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, இமயா கக்கன், முனிஸ்வர கணேசன், பி.வி.தமிழ் செல்வன், தணிகாசலம், மாவட்ட தலைவர் திரவியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எஸ்.சி.துறை சார்பில் நலிந்த கட்சி தொண்டர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.