தமிழ்நாடு (Tamil Nadu)

குமரியில் குளுகுளு சீசன்: மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-12-28 05:40 GMT   |   Update On 2022-12-28 05:40 GMT
  • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

நேற்று இரவு மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் மழை நீடித்தது. அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை சுமார் அரைமணி நேரமாக நீடித்தது. சுசீந்திரம், கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதி வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.37 அடியாக உள்ளது. அணைக்கு 786 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.99 அடியாக உள்ளது. அணைக்கு 173 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கூடல் அணை நீர்மட்டம் 20.80 அடியாக உள்ளது.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் விசைப்படகுகள், வள்ளங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News