70.67 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும்
- புவியியல் வரைபடம் ஆகிய நலத் திட்டப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
- நோட்டுப் புத்தகங்களும், 8 லட்சத்து 22 ஆயிரத்து 603 பேருக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 2024-2025-ம் கல்வியாண்டில் அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதியுதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள், மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, பூட்ஸ் மற்றும் காலுறைகள், சீருடைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதி வண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத் திட்டப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
இவற்றில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) அன்றே மாணவா்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகம், புவியியல் வரை படம் ஆகிய நலத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிக் கல்வியில் 70 லட்சத்து 67 ஆயிரத்து 94 மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களும், 60 லட்சத்து 75 ஆயிரத்து 315 மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 8 லட்சத்து 22 ஆயிரத்து 603 பேருக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.