தமிழ்நாடு (Tamil Nadu)

பொள்ளாச்சியில் பிரிட்ஜ் வெடித்து சென்னை இன்ஸ்பெக்டர்-பெண் பலி

Published On 2023-03-09 09:23 GMT   |   Update On 2023-03-09 10:56 GMT
  • தீ விபத்தில் சபரிநாத், சாந்தி ஆகியோர் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.
  • இன்ஸ்பெக்டர் வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சென்னை:

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான பொள்ளாச்சி நல்லூருக்கு சென்றார். இங்கு தனது உறவினர்களை சந்தித்து விட்டு தனது வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவரது கீழ் வீட்டில் வசித்து வரும் சாந்தி(37) என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத்தின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு அவர் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. அறைக்குள் மட்டும் பற்றி எரிந்த தீ சில நிமிடங்களில் வீடு முழுவதும் பரவி எரிந்து கொண்டிருந்தது.

இந்த தீ விபத்தில் சபரிநாத், சாந்தி ஆகியோர் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.

அப்போது அவர்களது உடலிலும் தீ பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிற்குள் சபரிநாத்தும், சாந்தியும் உடல் கருகி பிணமாக கிடந்தனர்.

இதையடுத்து போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது, குளிர்சாதன பெட்டி வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் குளிர்சாதன பெட்டி வெடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News