வந்தவாசியில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலனை- சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
- வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள்.
- முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சட்டசபையில் வினா-விடை நேரத்தில் வந்தவாசி தொகுதியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு முன் வருமா? என வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-
கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1962 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உயர்ந்துள்ளது.
சங்கத்தில் 36 வகைகளில் காதி கிராப்ட், அரசு மருத்துவமனைகள் சர்வோதய சங்கங்கள், அரசு பள்ளிகள், கல்லூரி விடுதிகள் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் வாரியத்தால் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள். இச்சங்கத்தின் பாய் வகைகள் கதர் வாரியத்தின் வழிகாட்டுதலின்படி உரிய வகையில் சந்தை படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஒரு பாய் உற்பத்தி செய்யும் சங்கம் உள்ளது. வந்தவாசியிலும் சிறுபான்மையினர் சார்பில் அதிக நபர்கள் வசிக்கிறார்கள். இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.
ஆவூர் மற்றும் வந்தவாசியில் பாய் நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சீர்காழியில் இருக்கும் பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. அதே போன்று பாய் நெசவு பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கீழ்பெண்ணாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப் பன், "ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாய் நெசவு தொழில் பொருட்கள் அரசு நிறுவனங்களுக்கு முறையாக அளிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி அல்லது ஆவூரில் பாய் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்பட்டு பாய் நெசவுப் பூங்கா அமைப்பது குறித்து இடம் வழங்கப்படுமானால் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.