சேத்துப்பட்டு வங்கியில் துப்பாக்கி வெடித்து காவலாளி வயிற்றில் குண்டு பாய்ந்தது
- வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக்கொண்டிருந்தபோது காவலாளி ராணாசிங் துப்பாக்கியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.
- துப்பாக்கி தவறுதலாக வெடித்தபோது “டுமீல்” என்கிற பலத்த சத்தம் கேட்டது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் பணி இன்று காலையில் நடைபெற்றது.
தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டபுள்பேரல் துப்பாக்கியுடன் ராணாசிங் என்ற காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக்கொண்டிருந்தபோது காவலாளி ராணாசிங் துப்பாக்கியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது துப்பாக்கி எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டுகள் ராணா சிங்கின் வயிற்றை துளைத்தன. குண்டு பாய்ந்ததில் அவருக்கு வயிற்றின் இடது பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
துப்பாக்கி தவறுதலாக வெடித்தபோது "டுமீல்" என்கிற பலத்த சத்தம் கேட்டது. இது ஹாரிங்டன் சாலை பகுதியில் ஏ.டி.எம்.மை சுற்றியுள்ள பகுதியில் பயங்கர சத்தத்துடன் எதிரொலித்தது. அப்பகுதியில் இருந்த மக்கள் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சேத்துப்பட்டு போலீசார் காவலாளி ராணாசிங்கை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.