தமிழ்நாடு

சென்னை-புறநகர் பகுதியில் கடும் பனி மூட்டம்: விமானங்கள் தாமதம்

Published On 2023-02-07 06:07 GMT   |   Update On 2023-02-07 06:09 GMT
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
  • அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.

ஆலந்தூர்:

வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.

இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.

Tags:    

Similar News