தமிழ்நாடு

கனமழை எதிரொலி- நீலகிரியில் பேரிடர் மீட்புப்படை முகாம்

Published On 2024-07-17 05:18 GMT   |   Update On 2024-07-17 05:49 GMT
  • அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
  • உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

இந்நிலையில் நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் விரைந்தனர்.

உதகை, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

நீலகிரிக்கு சென்ற ஒவ்வொரு குழுவிலும் தலா 10 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News